விசாரணை முடியும் முன்பே ரெட்டி சகோதரர்கள் குற்றமற்றவர்கள் என கூறுவது சரியல்ல: சந்தோஷ் ஹெக்டே
July 21, 2010 by sathya
பெங்களூர், ஜூலை 20: சட்டவிரோத சுரங்கத் தொழில் குறித்து விசாரணை நடந்து முடியும் முன்பே, ரெட்டி சகோதரர்கள் குற்றமற்றவர்களென முதல்வர் எடியூரப்பா கூறுவது சரியல்ல என்று லோக் அயுக்தா நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார். துணை லோக் அயுக்தாவாக ஓய்வு பெற்ற நீதிபதி சசிதர பீமாராவ் மஜகே பதவிப் பிரமாண நிகழ்ச்சி திங்கள்கிழமை ஆளுநர் மாளிகையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் சந்தோஷ் ஹெக்டே கலந்து கொண்டார். அப்போது ஹெக்டேயை சந்தித்த நிருபர்கள், ரெட்டி சகோதரர்களுக்கு சட்டவிரோத சுரங்கத் தொழிலில் பங்கு இல்லை என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளாரே என்று நிருபர்கள் கேட்டனர். அதற்குப் பதில் அளித்து ஹெக்டே கூறியது: சட்டவிரோதமாக நடந்து வரும் சுரங்கத் தொழில் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அந்த விசாரணை முடியும் வரை யாரும் குற்றவாளி இல்லை என்று கூறிவிட முடியாது. விசாரணை முழுமையாக முடிவடைந்த பிறகே யார்-யார் தவறு செய்துள்ளார்கள் என்ற விவரம் தெரியவரும். சிலர் சுரங்கத் தொழிலை சட்டவிரோதமாக வெளி மாநிலங்களில் நடத்தலாம். அவ்வாறு நடத்தினாலும் விசாரணையில் இருந்து தப்ப முடியாது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வெளி மாநிலங்களில் விசாரணை நடத்தத் தடை ஏதும் இல்லை. அந்த மாநில போலீஸôர் உதவியுடன் இந்த விசாரணையை நடத்தி முடிக்க முடியும். இவ்வாறு விசாரணை நடத்த லோக் அயுக்தா அமைப்புக்கு கூடுதல் போலீஸôர் தேவைப்படுவர். அந்த வசதியை அரசு செய்து கொடுக்கும் என்றார் அவர்.




Comments
Feel free to leave a comment...
and oh, if you want a pic to show with your comment, go get a gravatar!
You must be logged in to post a comment.